புனித சூசையப்பர் ஆலயம்

புராதனக் கோயில்:

13-05-2007 அன்று 150 ஆம் ஆண்டுவிழாக் கொண்டாடிய புனித சூசையப்பர் ஆலயத்திற்கு முன்பே கூட்டப்புளியில் கோயில் ஒன்று இருந்தது. அது சூசையப்பருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது.
“The list of 1571, however mentions a Church of St.Joseph on the boundary of Travancore east of the cape and St. Joseph is the patron of the Church of Kuttapuli”
அக்கோயில் இப்பொழுது நம் கோயில் கட்டப்பட்டிருக்கும் இடத்திலேயே கட்டப்பட்டிருக்கலாம். அதுவும் சவேரியாரால் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறேன். காரணம் ஊரின் நடுப்பகுதியில் கோயில் கட்டுவதுதான் சவேரியாரின் பாணி.
போர்ச்சுக்கல் அரசர் 3ஆம் ஜாண் என்பவருக்கு பிரையர் லவுரங்கோ டா கோயஸ் (Friar Lowrenco da Goes - guardian of Franciscan Friary of Cochin) 28-12-1536ல் எழுதிய கடிதத்தில் “புதிதாக கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய முத்துக்குளித்துறைப் பகுதிகளில் கோயில்களே இல்லை” என்கிறார். முத்துக்குளித்துறையில் ஏறக்குறைய 30 கோயில்கள் இருந்தன. அவைகள் மிக விஸ்தாரமாக, களிமண்ணினாலும், மரத்தினாலும் கட்டப்பட்டு, பனை ஓலையால் கூரை வேயப்பட்டு, அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன, என்கிறார் வரலாற்று ஆசிரியர் ஜோசப் விக்கி. 18-12-1544ல் புனித சவேரியார் மான்சிலாலுக்கு எழுதிய கடிதத்தில் அனைத்து ஊர்களிலும் பள்ளிக்கூடம் அமைக்கப்பட வேண்டும் என்கிறார். பள்ளிக்கட்டிடத்திற்கு முன் ஆலயத்திற்குத்தானே அவர் முன்னுரிமை கொடுத்திருப்பார். எனவே 30 பகுதிகளில் அல்லது 30 ஊர்களில் ஒன்றான கூட்டப்புளியிலும் 1544 க்கு முன்னரே கோயில் இருந்திருக்க வேண்டும், என நான் முடிவுக்கு வருகிறேன்.
பனை ஓலையால் கூரை வேயப்பட்ட கூட்டப்புளிக் கோயிலுக்கு ஒரு காலக்கட்டத்தில் ஓடுகள் பொருத்தியிருக்கிறார்கள். அது மிகச் சிறிய கோயிலாக இருந்தது.

புதிய ஆலயம்:

கூட்டப்புளியில் இன்று நாம் விழா எடுத்துக் கொண்டாடி மகிழும் புதிய ஆலயம் கட்டுவதற்கு, முத்துக்குளித்துறையில் திருமறை வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்த “இரட்டை ஆட்சி” என்று சொல்லப்படுகின்ற ஞானக்குழப்பங்கள் பின்னணியாக அமைகிறது. அது என்ன இரட்டை ஆட்சி ! என்ன ஞானக்குழப்பம்? பாப்பரசர்களுக்கும் போர்ச்சுக்கல் மன்னர்களுக்கும் திருமறை பரப்புவதில் ஏற்பட்ட கருத்து வேற்றுமைகள் தான் ஞானக்குழப்பங்கள் என்று சொல்லப்படுகின்றது.

போர்ச்சுக்கல் கண்டுபிடிக்கும் கீழ்த்திசை நாடுகள் அனைத்திலும் திருமறையைப் பரப்பும் பொறுப்பினையும், பெருமைமிக்க உரிமைகளையும் (போர்ச்சுக்கல் பதுருவதோ) 01-08-1454 ல் பாப்பரசர் 5ஆம் நிக்கோலஸ் போர்ச்சுக்கல் நாட்டு மன்னர்களுக்கு வழங்கியிருந்தார்.
பொருளாதாரப் பின்னடைவின் காரணமாக போர்ச்சுக்கல் அரசால் திருமறை பரப்பும் பணியினைச் சீராக செய்ய முடியவில்லை. எனவே, பாப்பரசர் 15ஆம் கிரகோரியார் வேதபோதக நாடுகளில் திருமறை பரப்புதலைச் சீராகச் செய்ய விசுவாசப்பரப்புதல் சபையை (The sacra congregation de Propaganda Fide) 1622 ஆம் ஆண்டு ஆரம்பித்து விக்கர் அப்போஸ்தலிக்குகளை (Vicar Apostolic) நியமித்து மறைமாவட்ட ஆயர்களுக்குரிய உரிமைகளோடு பல நாடுகளுக்கும் அனுப்பி வைத்தார். போர்ச்சுக்கல் அரசுக்கு இது ஏற்புடையதாக இல்லை. “ஒரே மந்தை ஒரே மேய்ப்பன்” என்பது மாறி ஒரே ஊரில் மதுரை மிஷன், கோவா மிஷனைச் சேர்ந்த ஞான மேய்ப்பர்களைத் தலைமையாகக் கொண்டு பல ஊர்களில், மேலக்கட்சி கீழக்கட்சி என கட்சிகள் உருவாயின. கூட்டப்புளியும் இதற்கு விதிவிலக்கல்ல.

கூட்டப்புளியில், புனித சூசையப்பருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்த பழைய கோயில் மேலக்கட்சியைச் சார்ந்த மதுரை மிஷன் குருக்களின் ஆளுமையில் இருந்தது. கீழக்கட்சிகாரர்கள் கோவா மிஷனைச் சார்ந்து இருந்தனர். அவர்கள் தங்களுக்கென்று ஒரு கோயிலைக் கட்டினர். அதுதான் நமது தேர்மாலை. அங்கேயும் வழிபாடுகள் நடந்தன. (தேர்மாலைக்கு உள்ளே கீழ்ப்புறம் ஒரு பலிபீடம் இருந்ததை நம்மில் பலர் பார்த்திருக்கிறார்கள்.) தேர்மாலை தான் கூட்டப்புளியில் கட்டப்பட்ட முதல் கற்கோயில். தேர்மாலை 1829 ஆம் ஆண்டுக்குப் பின்னர், புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டிருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். தேர்மாலை கட்டப்படுவதற்கு முன்பே நம் ஊரில் தேர்கள் இருந்ததாக, நம் ஊர் தேர்ப்பாடல்களில் சில வரிகள் காணப்படுகிறது. 1829 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 3 ஆம் ஞாயிறு அன்று தேர்ப்பாடல்கள் பாடியிருக்கிறார்கள்.
நமது தேரில் இப்பொழுது வைக்கக்கூடிய சூசையப்பர் சுரூபம் (குடிகொண்ட சுரூபம்) புனித சூசையப்பர் ஆலயப் பொன்விழாவின் நினைவாக 1907 ஆம் ஆண்டு புதுச்சேரியிலிருந்து வரவழைக்கப்பட்டு அர்ச்சிக்கட்டிருக்கிறது.

மதப்பிரிவினரால் மேலத்தெரு, கீழத்தெரு என்று, போட்டிகளும் பொறாமைகளும் தலைவிரித்தாடின. மேலத்தெருக்காரர்கள் அந்தோனியார் குருசடி ஒன்றைக் கட்டினர். கீழத்தெருக்காரர்கள் அதிசய மாதாவுக்கென்று ஒரு சிற்றாலயம் கட்டினர். இந்தக் காலக்கட்டத்தில் கீழத்தெருவில் ஒருவர் இறந்து விடுகிறார். அவரைப் புதைப்பதற்கு கல்லறைத் தோட்டத்தில் (மையவாடி) இடம் மறுக்கப்பட்டது. எனவே, அவரை அவருடைய சொந்தக்காரர் நிலத்தில் புதைத்தனர். பின்னர் கீழக்கட்சியில் இறந்தவர்கள் அங்கேயே புதைக்கப்பட்டனர். அந்த இடம்தான் ஊருக்கு கிழக்கே இருக்கிற அந்தோனியார் குருசடிப் பகுதி. ( அங்கே தோண்டும் போது இன்றும் எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன.) பின்னர் அங்கேயும் அந்தோனியாருக்கென்று ஒரு குருசடியைக் கட்டிக் கொண்டனர். அந்தோனியார் குருசடி சொந்த நிலத்தில் கட்டியதால் இன்றும் அது, தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் (திருமதி செல்லத்தாய் சுவானிப் பிள்ளை) பராமரிப்பில் உள்ளது.
1855 ஆம் ஆண்டு கித்தேரியான் பட்டங்கட்டி என்றொருவர், கூட்டப்புளி காரி மிக்கேல் என்பவரோடு தோழமைக் கொண்டு கூட்டப்புளி மக்களுக்கு மதரீதியாகப் பல தொல்லைகள் கொடுத்து வந்தார். இக்குழப்பங்களுக்கும், கொந்தளிப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த பெருமகனார் அருட்பணி. சில்வியன் லவுரன் அவர்கள். இரு கட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டன. 1855 ஆம் ஆண்டு அருட்பணி. சில்வியன் லவுரன் அடிகள் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார். அவருக்குப் பின் பொறுப்பேற்ற அருட்பணி. ரெமி பர்னாண்டஸ் அடிகள் கோயிலை முழுமையாகக் கட்டி முடித்தார். 1857 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி கோயில் மந்தரிக்கப்பட்டது. மேலத்தெரு அந்தோனியார் குருசடியில் வைத்திருந்த அந்தோனியார் சுரூபமும், கீழத்தெரு அதிசய மாதா சிற்றாலயத்திலிருந்த மாதா சுரூபமும், புதிய ஆலயத்திற்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த சுரூபங்களைத்தான் நாம் இன்று, நம் தேர்களில் பயன்படுத்துகின்றோம். குருசடியும், சிற்றாலயமும் பராமரிக்கப்படாமல் அழிந்து போயின. (ஆதாரம்: திரு. M.A. செல்லப்பா)
புதிதாகக் கட்டப்பட்ட ஆலயமும் சிறியதாக இருந்ததினால், மேலும் விரிவாக்கப்பட்டு 1878, மார்ச் முதல் தேதி, சுவாமி பாசயோ என்பவரால் மந்தரிக்கப்பட்டது. 1957 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி இவ்வாலயத்திற்கு நூற்றாண்டு விழா எடுத்துச் சிறப்பித்தனர் நம் முன்னோர்கள்.

புனித சூசையப்பருக்கு நன்றி காணிக்கையாக கூட்டப்புளி மக்கள் 406.81 கிராம் எடையில் தங்கக்கோல் ஒன்றை வைத்து அழகு பார்க்கின்றனர். இந்நிகழ்ச்சி 17-02-2006 அன்று இறையருளால் நிறைவேறியது. தங்கச் செங்கோலின் மேலே, புறா வடிவில் தூய ஆவியானவர் திருவுருவமும், அதன் கீழே ஏழு இலைகளும், ஏழு பூக்களும், ஏழு காய்களும், ஏழு கனிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவை, புனித சூசையப்பர் பட்ட ஏழு வியாகுலங்களையும், ஏழு சந்தோசங்களையும் வெளிப்படுத்துகிறது.