பங்குத்தந்தையிடமிருந்து...

கூடலம்பதி வாசம்!
குண்டுமல்லி வாசம்!
 
புனித சூசையப்பரின் சுந்தரப் பிள்ளைகளே, 
தங்க சூசையப்பரின் சிங்க பக்தர்களே,
வாஞ்சைநிறை வணக்கம்.
 
வங்கச் சமுத்திரம் நித்தம் தங்கச் சித்திரம் 
பொங்கும் அலையால் எங்கும் எழுதும்
கானலப் பெருந்துறையே கூடலம்பதியெனும் கூட்டப்புளி.
 
பொங்கு மாகடலும் பொருநை மாநதியும் வாரி வழங்கும், 
நெற்கதிரும் நெத்திலியும் நித்திலமும்
நெய்தல் நிலத்தின் நிவேதனப் பொட்டுகள்.
 
பரவையின் நீர்ப்பறவைகளாம் பரதவர்,
பரந்து விரிந்த முந்நீரின் மடியில் பரவசமாய் பக்குவமாய்
மதர்ப்போடும் தருக்கோடும் கடலோடும் கடல்துறையிது.
 
பெருங்கடல் வேட்டத்து தொல்குடிப் பரதவராய்,
வலம்புரி முத்தெடுக்கும் வான்திமிர் பரதவராய்,
தமிழ்வேந்தரின் கடற்படையில் தீரத்தோடு சமர்புரிந்து
கடல் கடந்த தமிழர் வணிகம் செழிக்க வைத்த செம்மாந்த குடியிது.
 
தமிழத்தின் தனிப்பண்புகளோடும்
கிறிஸ்தவத்தின் சிறப்புக் கூறுகளோடும் 
மீனவத்தின் பிரத்யேகப் பண்புகளோடும் 
ஊழி ஊழி காலமாக தலைமுறை தலைமுறையாகப் பயணித்து வரும் பண்பாடு இது.
 
முத்துக்குளித்துறையின் துறைகளில் 
தனித்துவம் பெற்ற தனித்துறை கூட்டப்புளி.
 
தூத்துக்குடி மறைமாவட்டத்தில்
புனித சூசையப்பரைப்  பாதுகாவலராகப் பேறு பெற்ற ஒரே கடல்துறை.
முத்துக்குளித்துறை மறைமாவட்டத்தின் கடைசிக் கடல்துறை.
 
புனித வளனாரின் மீது கொண்ட வளமான பக்தியினால்
இறைவன் வளப்படுத்திய பிரதேசம்.
 
கல்விக்கு சிறப்புக் கவனம் கொடுக்கும் யௌவனம்...
கல்விப் பணிக்காக தொலைநோக்கோடு சிந்திக்கும், முன்னெடுக்கும், செயல்படும் வாலிபம்...
இது வேறெந்தக் கடல்துறையிலும் காணாத குணாதிசயம்.
 
பக்தி கமழும் இப்பாரம்பரியப் பங்கின் பங்குத்தந்தையாகப் பணியாற்றுவதில் இறும்பூது எய்துகிறேன்.
 
கூடலம்பதியினர் தாம் பிறந்த மண்ணை
ஸ்பரிசித்து, ஸ்நேகித்து, வாஞ்சிக்கும் 
தன்னிகரற்ற  உளப்பாங்கை எண்ணி வியக்கிறேன்.
 
தொழிலில் தெய்வத்தை ஸ்பரிசிக்கும் தூயர்களாய், 
கற்றலில் கடவுளின் கரம்பற்றும் காரியர்களாய்,
இசையில் இறைமையை தரிசிக்கும் கலாரசிகர்களாய் மிளிரும்
கூடலம்பதியினரை  வாழ்த்தி ஜெபிக்கிறேன்.
 
கத்தோலிக்கத்தின் வேர்களுக்கு சாமரம் வீசும் பூவரசம் விருட்சங்களாம்
கூடல்நகரோர்க்கு என் வசந்த வந்தனங்கள்.
 
லாவண்யமான தேவாலயம்...
செவ்வையான சிற்றாலயங்கள்...
கவின்மிகு கல்விக்கூடங்கள்...
விருந்தோம்பலின் வெளிப்பாடுகளாக இல்லங்கள்...
 
அனைத்தும் ஆண்டவரின் ஆசீர்வாதங்கள்.
 
ஆபிரகாமின் விசுவாசமும் கடலின் காருண்யமும் 
இளவேனிலின் இனிமையும் காட்டுத்தேனின் தித்திப்பும் 
பூக்களின் புளகாங்கிதமும் நம்மில் எப்போதும் மலர ஆசிக்கிறேன்.
 
கத்தோலிக்கத்தின் முதல் பாப்பு, 
கலிலேய மீனவர் இராயப்பர் என்பதில் களிப்படைகிறேன்.
 
வாழ்வின் சிகரங்களை நோக்கிப் பயணிக்கும் சிறாரை, யௌவனரை,  யுவதியரை வாழ்த்தி ஜெபிக்கிறேன்.
அவர்களுக்குக் கிரியா ஊக்கியாகத் திகழும் பெற்றோரைத்  தொழுகிறேன்.
 
வாழ்க கூடலம்பதி!
வளர்க வளனார் புகழ்!
 
 
 
வாஞ்சையோடு ஆசீர்,
 
FrRanjithkumar
அருள்திரு. ரஞ்சித்குமார் கர்டோஸா