கூட்டப்புளி வரலாறு

கூட்டப்புளி ஊர் தோன்றிய காலக்கட்டம்:

தற்பொழுது கூட்டப்புளி ஊர் அமைந்துள்ள இடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கடல் நீரால் சூழப்பட்டிருந்தது. புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாம் இன்றும் காண்கின்ற சிப்பிகள் இதற்கு ஆதாரமாகின்றன. புயல்காற்று பலதரம் வீசி மணல் திட்டுக்களை ஏற்படுத்தியதன் காரணமாக கடல் உள்வாங்கிக் கொண்டது. கடல் உள்வாங்கி நிலப்பரப்பு ஏற்பட்டபின், அந்தக் காலத்தில் திருமறையைப் போதிக்க வந்த இயேசு சபை அருட்பணியாளர்கள் கடற்கரைக் கிராமங்களில், பாதுகாப்பின்றி ஆங்காங்கே சிதறிக்கிடந்த கத்தோலிக்க மீனவக் கிராமக் குடும்பங்களை கூட்டப்புளிக்கு அழைத்து வந்து குடியமர்த்தினர் என்று வரலாற்றுச் சுவடிகள் கூறுகின்றன.
இது எந்தக் காலக்கட்ட நிகழ்வுகள்? இந்த நிகழ்வுகளுக்கு முன்னால் கூட்டப்புளி என்றொரு ஊர் இருந்ததா? அப்படி இருந்ததென்றால் எந்தப் பகுதியில் இருந்தது? என்பதை நாம் தெரிந்து கொள்வதற்கு தமிழக அரசியல் நிலைப் பற்றியும், முத்துக்குளித்துறையின் வேதபோதகப் பின்னணிகளைப் பற்றியும் தெரிந்திருப்பது அவசியமாகிறது.

புனித சவேரியார் முத்துக்குளித்துறைப் பகுதிகளில் திருமறையைப் போதித்த காலக்கட்டத்தில் (அக்டோபர் 1542 லிருந்து செப்டம்பர் 1543க்குள்) மணப்பாடிலிருந்து புறப்பட்டு கடற்கரை வழியாக பெருமணலை அடுத்த பரவர் கிராமமான கூட்டப்புளிக்கு வந்தார் என்றொரு தகவல் நமக்குக் கிடைக்கிறது. எனவே செப்டம்பர் 1543 ஆம் ஆண்டுக்கு முன்பே கூட்டப்புளி ஊர் இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.
1571 ஆம் வருடத் தகவல்படி திருவாங்கூர் சமஸ்தான ஆட்சி எல்கையையும், மதுரை நாயக்கர்களின் ஆட்சி எல்கையையும் பிரிக்கும் இடமாக கூட்டப்புளி இருந்தது. இதன் காரணமாக கடற்கரைக் கிராமங்களில் கூட்டப்புளி முக்கியமான அந்தஸ்தைப் பெற்றிருந்ததாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

*முத்துக்குளித்துறை பரவ மீனவர்கள், தமிழகத்தை ஆண்ட இந்து மன்னர்களாலும் முகமதியர்களாலும் துன்புறுத்தப்பட்ட காலக்கட்டம் (1544-1597)

***1544 ஆம் ஆண்டு வெட்டும்பெருமாள் என்ற இந்து அரசன் கன்னியாகுமரியைத் தாக்கினான். புனித சவேரியார் கன்னியாகுமரி மக்களை மீட்டு மணப்பாட்டில் தங்க வைத்தார்.

***1551, 1553, 1560 ஆம் ஆண்டுகளில் புன்னக்காயல் தாக்கப்பட்டது.

*மணப்பாட்டுக்கு வடக்குப் பகுதியிலுள்ளவர்கள் மன்னாரில் (இலங்கை) குடியேறினர். கொள்ளை நோய் தாக்கி 400க்கும் மேற்பட்டவர்கள் மடிந்ததினால் 1564 ஆம் ஆண்டு, பெரும்பாலானோர், தங்கள் தங்கள் ஊருக்குத் திரும்பினர்.
இவர்களுடைய வழிவந்த பரதகுல மக்கள் இன்றும் இலங்கையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதைக் காண்கிறோம்.
16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விஜயாபதியைத் (இடிந்தகரைக்கு வடக்குப் பக்கம்) தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட ஆரியப்பெருமாள் உவரியைத் தாக்கி, உவரியின் முக்கியமான ஆண்களைச் சிறைப்பிடித்தான். பெண்களை நிர்வாணமாக்கி, அவர்கள் தலைமுடியைக் கொண்டே, இருவர் இருவராகக் கட்டி, ஆட்டு மந்தைப் போல் தன் அரண்மனைக்கு ஓட்டிச் சென்றான் என்று கூறப்படுகிறது. இந்தக் கொடூரச் செயலைக் கண்டு வெகுண்டெழுந்த பக்கத்து கடற்கரைக் கிராமங்களைச் சார்ந்த பரத இளைஞர்கள் பலர் ஒன்று திரண்டு ஆரியப்பெருமாளையும், அவனுடைய அடியாட்களையும் தாக்கி மேலும் பலரையும் வெட்டிச்சாய்த்ததாகவும் அறிகிறோம்.

***1597ல் உவரி மக்கள் மணப்பாட்டில் தஞ்சம் புகுந்தனர்.

***1597 ஆம் ஆண்டின் இறுதியில் இயேசு சபை அதிபரின் ஆலோசனைப்படி ஆலந்தலை, தாளம்புளி மற்றும் திருச்செந்தூர் மக்கள் வீரபாண்டியன் பட்டணத்திற்கு புலம் பெயர்ந்தனர்.
இவ்வாறாக, அரசாண்ட மன்னர்களின் கோரப்பிடியில் சிக்கி, சிதைந்து போயிருந்த, உவரிக்கு கிழக்கே வாழ்ந்த கடலோர மீனவர்கள் மணப்பாடு, வீரப்பாண்டியன் பட்டணம், இலங்கை போன்ற இடங்களுக்குச் சென்று விட்டனர். அப்படியானால் உவரிக்கு மேற்கே, கன்னியாகுமரிக்கு கிழக்கேயுள்ள கடலோரக் கிராமங்களில் வாழ்ந்த பரவர் எங்கு குடியமர்த்தப்பட்டனர்? இங்கேதான் கூட்டப்புளி தலைநிமிர்ந்து நிற்கிறது.

கூட்டப்புளி, கடற்கரைக் கிராமங்களில் முக்கியமான அந்தஸ்த்தைப் பெற்றிருந்த காரணத்தினால், வீரமும், விவேகமும், ஆளுமைத் தன்மையும், வந்தாரை வாழவைக்கும் மனித நேயமும் கொண்ட மக்கள் வாழ்ந்த கூட்டப்புளியே பாதுகாப்பான இடம் என்று கருதிய இயேசு சபை அருட்பணியாளர்கள், கூந்தன்குளியிலிருந்து கூட்டப்புளிக்கு இடைப்பட்ட ஊர்களில் வாழ்ந்த மீனவக் குடும்பங்களை, கூட்டப்புளியில் குடியமர்த்தியிருக்கலாம் எனக் கருதுகிறேன்.
இந்தக் குடியமர்த்தலுக்கு முன்னர், கூட்டப்புளி மக்கள் தற்போதுள்ள ஊருக்கு, ஒரு மைல் தொலைவில் கூட்டம் கூட்டமாகயிருந்த புளியமரத் தோப்புகளில், குடிசைகள் அமைத்து வாழ்ந்து வந்தனர் என்கிறார் வரலாற்று ஆசிரியர் Georg Schurhammer. (.... there were living three or four families in a tamarind grove one mile away from the present village.)

புளியமரத் தோப்புகளில் வாழ்ந்ததாலேயே இந்த ஊருக்கு கூட்டப்புளி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதத்தோன்றுகிறது.

நம் முன்னோர்கள், கூட்டப்புளி விலக்கு, வரலாற்றுப் புகழ்மிக்க ஊருணிக்கு வடக்கே, பழைய ஆலமரம் நின்ற பகுதிகளில் வாழ்ந்திருக்க வேண்டும் என்று நாம் யூகித்துக் கொள்ளலாம்.

கூட்டப்புளியில் கத்தோலிக்கம்:

கூட்டப்புளியில் கிறிஸ்துவின் ஒளி வீசத் தொடங்கியது, முத்துக்குளித்துறையில் திருமறை வந்த வரலாற்றோடு பின்னிப்பிணைந்திருக்கிறது.
முத்துக்குளித்துறையின் 30 பகுதிகளில் 20,000த்திற்கும் மேற்பட்டவர்கள் கத்தோலிக்க மதத்தில் சேர்ந்தனர். 1536ஆம் ஆண்டு மார்ச், ஏப்பிரல் மாதங்களில் ஆண்களுக்கும், மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரைப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது.

எனவே, இந்த காலக்கட்டத்திலோ (1535-36) அல்லது புனித சவேரியார் கூட்டப்புளி மக்களைச் சந்தித்த காலக்கட்டமான அக்டோபர் 1542லிருந்து செப்டம்பர் 1543 ஆம் ஆண்டுக்குள்ளோ கூட்டப்புளி மக்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியிருக்க வேண்டும் எனக் கருதுகிறேன்.

கூட்டப்புளியில் புனித சூசையப்பர் ஆலயம்

புராதனக் கோயில்: 13-05-2007 அன்று 150 ஆம் ஆண்டுவிழாக் கொண்டாடும் புனித சூசையப்பர் ஆலயத்திற்கு முன்பே கூட்டப்புளியில் கோயில் ஒன்று இருந்தது. அது சூசையப்பருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது.
“The list of 1571, however mentions a Church of St.Joseph on the boundary of Travancore east of the cape and St. Joseph is the patron of the Church of Kuttapuli”
அக்கோயில் இப்பொழுது நம் கோயில் கட்டப்பட்டிருக்கும் இடத்திலேயே கட்டப்பட்டிருக்கலாம். அதுவும் சவேரியாரால் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறேன். காரணம் ஊரின் நடுப்பகுதியில் கோயில் கட்டுவதுதான் சவேரியாரின் பாணி.
போர்ச்சுக்கல் அரசர் 3ஆம் ஜாண் என்பவருக்கு பிரையர் லவுரங்கோ டா கோயஸ் (Friar Lowrenco da Goes - guardian of Franciscan Friary of Cochin) 28-12-1536ல் எழுதிய கடிதத்தில் “புதிதாக கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய முத்துக்குளித்துறைப் பகுதிகளில் கோயில்களே இல்லை” என்கிறார். முத்துக்குளித்துறையில் ஏறக்குறைய 30 கோயில்கள் இருந்தன. அவைகள் மிக விஸ்தாரமாக, களிமண்ணினாலும், மரத்தினாலும் கட்டப்பட்டு, பனை ஓலையால் கூரை வேயப்பட்டு, அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன, என்கிறார் வரலாற்று ஆசிரியர் ஜோசப் விக்கி. 18-12-1544ல் புனித சவேரியார் மான்சிலாலுக்கு எழுதிய கடிதத்தில் அனைத்து ஊர்களிலும் பள்ளிக்கூடம் அமைக்கப்பட வேண்டும் என்கிறார். பள்ளிக்கட்டிடத்திற்கு முன் ஆலயத்திற்குத்தானே அவர் முன்னுரிமை கொடுத்திருப்பார். எனவே 30 பகுதிகளில் அல்லது 30 ஊர்களில் ஒன்றான கூட்டப்புளியிலும் 1544 க்கு முன்னரே கோயில் இருந்திருக்க வேண்டும், என நான் முடிவுக்கு வருகிறேன்.
பனை ஓலையால் கூரை வேயப்பட்ட கூட்டப்புளிக் கோயிலுக்கு ஒரு காலக்கட்டத்தில் ஓடுகள் பொருத்தியிருக்கிறார்கள். அது மிகச் சிறிய கோயிலாக இருந்தது.

புதிய ஆலயம்:

கூட்டப்புளியில் இன்று நாம் விழா எடுத்துக் கொண்டாடி மகிழும் புதிய ஆலயம் கட்டுவதற்கு, முத்துக்குளித்துறையில் திருமறை வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்த “இரட்டை ஆட்சி” என்று சொல்லப்படுகின்ற ஞானக்குழப்பங்கள் பின்னணியாக அமைகிறது. அது என்ன இரட்டை ஆட்சி ! என்ன ஞானக்குழப்பம்? பாப்பரசர்களுக்கும் போர்ச்சுக்கல் மன்னர்களுக்கும் திருமறை பரப்புவதில் ஏற்பட்ட கருத்து வேற்றுமைகள் தான் ஞானக்குழப்பங்கள் என்று சொல்லப்படுகின்றது.

போர்ச்சுக்கல் கண்டுபிடிக்கும் கீழ்த்திசை நாடுகள் அனைத்திலும் திருமறையைப் பரப்பும் பொறுப்பினையும், பெருமைமிக்க உரிமைகளையும் (போர்ச்சுக்கல் பதுருவதோ) 01-08-1454 ல் பாப்பரசர் 5ஆம் நிக்கோலஸ் போர்ச்சுக்கல் நாட்டு மன்னர்களுக்கு வழங்கியிருந்தார்.
பொருளாதாரப் பின்னடைவின் காரணமாக போர்ச்சுக்கல் அரசால் திருமறை பரப்பும் பணியினைச் சீராக செய்ய முடியவில்லை. எனவே, பாப்பரசர் 15ஆம் கிரகோரியார் வேதபோதக நாடுகளில் திருமறை பரப்புதலைச் சீராகச் செய்ய விசுவாசப்பரப்புதல் சபையை (The sacra congregation de Propaganda Fide) 1622 ஆம் ஆண்டு ஆரம்பித்து விக்கர் அப்போஸ்தலிக்குகளை (Vicar Apostolic) நியமித்து மறைமாவட்ட ஆயர்களுக்குரிய உரிமைகளோடு பல நாடுகளுக்கும் அனுப்பி வைத்தார். போர்ச்சுக்கல் அரசுக்கு இது ஏற்புடையதாக இல்லை. “ஒரே மந்தை ஒரே மேய்ப்பன்” என்பது மாறி ஒரே ஊரில் மதுரை மிஷன், கோவா மிஷனைச் சேர்ந்த ஞான மேய்ப்பர்களைத் தலைமையாகக் கொண்டு பல ஊர்களில், மேலக்கட்சி கீழக்கட்சி என கட்சிகள் உருவாயின. கூட்டப்புளியும் இதற்கு விதிவிலக்கல்ல.

கூட்டப்புளியில், புனித சூசையப்பருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்த பழைய கோயில் மேலக்கட்சியைச் சார்ந்த மதுரை மிஷன் குருக்களின் ஆளுமையில் இருந்தது. கீழக்கட்சிகாரர்கள் கோவா மிஷனைச் சார்ந்து இருந்தனர். அவர்கள் தங்களுக்கென்று ஒரு கோயிலைக் கட்டினர். அதுதான் நமது தேர்மாலை. அங்கேயும் வழிபாடுகள் நடந்தன. (தேர்மாலைக்கு உள்ளே கீழ்ப்புறம் ஒரு பலிபீடம் இருந்ததை நம்மில் பலர் பார்த்திருக்கிறார்கள்.) தேர்மாலை தான் கூட்டப்புளியில் கட்டப்பட்ட முதல் கற்கோயில். தேர்மாலை 1829 ஆம் ஆண்டுக்குப் பின்னர், புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டிருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். தேர்மாலை கட்டப்படுவதற்கு முன்பே நம் ஊரில் தேர்கள் இருந்ததாக, நம் ஊர் தேர்ப்பாடல்களில் சில வரிகள் காணப்படுகிறது. 1829 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 3 ஆம் ஞாயிறு அன்று தேர்ப்பாடல்கள் பாடியிருக்கிறார்கள்.
நமது தேரில் இப்பொழுது வைக்கக்கூடிய சூசையப்பர் சுரூபம் (குடிகொண்ட சுரூபம்) புனித சூசையப்பர் ஆலயப் பொன்விழாவின் நினைவாக 1907 ஆம் ஆண்டு புதுச்சேரியிலிருந்து வரவழைக்கப்பட்டு அர்ச்சிக்கட்டிருக்கிறது.

மதப்பிரிவினரால் மேலத்தெரு, கீழத்தெரு என்று, போட்டிகளும் பொறாமைகளும் தலைவிரித்தாடின. மேலத்தெருக்காரர்கள் அந்தோனியார் குருசடி ஒன்றைக் கட்டினர். கீழத்தெருக்காரர்கள் அதிசய மாதாவுக்கென்று ஒரு சிற்றாலயம் கட்டினர். இந்தக் காலக்கட்டத்தில் கீழத்தெருவில் ஒருவர் இறந்து விடுகிறார். அவரைப் புதைப்பதற்கு கல்லறைத் தோட்டத்தில் (மையவாடி) இடம் மறுக்கப்பட்டது. எனவே, அவரை அவருடைய சொந்தக்காரர் நிலத்தில் புதைத்தனர். பின்னர் கீழக்கட்சியில் இறந்தவர்கள் அங்கேயே புதைக்கப்பட்டனர். அந்த இடம்தான் ஊருக்கு கிழக்கே இருக்கிற அந்தோனியார் குருசடிப் பகுதி. ( அங்கே தோண்டும் போது இன்றும் எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன.) பின்னர் அங்கேயும் அந்தோனியாருக்கென்று ஒரு குருசடியைக் கட்டிக் கொண்டனர். அந்தோனியார் குருசடி சொந்த நிலத்தில் கட்டியதால் இன்றும் அது, தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் (திருமதி செல்லத்தாய் சுவானிப் பிள்ளை) பராமரிப்பில் உள்ளது.
1855 ஆம் ஆண்டு கித்தேரியான் பட்டங்கட்டி என்றொருவர், கூட்டப்புளி காரி மிக்கேல் என்பவரோடு தோழமைக் கொண்டு கூட்டப்புளி மக்களுக்கு மதரீதியாகப் பல தொல்லைகள் கொடுத்து வந்தார்.
இக்குழப்பங்களுக்கும், கொந்தளிப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த பெருமகனார் அருட்பணி. சில்வியன் லவுரன் அவர்கள். இரு கட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டன. 1855 ஆம் ஆண்டு அருட்பணி. சில்வியன் லவுரன் அடிகள் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார். அவருக்குப் பின் பொறுப்பேற்ற அருட்பணி. ரெமி பர்னாண்டஸ் அடிகள் கோயிலை முழுமையாகக் கட்டி முடித்தார். 1857 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி கோயில் மந்தரிக்கப்பட்டது. மேலத்தெரு அந்தோனியார் குருசடியில் வைத்திருந்த அந்தோனியார் சுரூபமும், கீழத்தெரு அதிசய மாதா சிற்றாலயத்திலிருந்த மாதா சுரூபமும், புதிய ஆலயத்திற்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த சுரூபங்களைத்தான் நாம் இன்று, நம் தேர்களில் பயன்படுத்துகின்றோம். குருசடியும், சிற்றாலயமும் பராமரிக்கப்படாமல் அழிந்து போயின. (ஆதாரம்: திரு. M.A. செல்லாப்பா)
புதிதாகக் கட்டப்பட்ட ஆலயமும் சிறியதாக இருந்ததினால், மேலும் விரிவாக்கப்பட்டு 1878, மார்ச் முதல் தேதி, சுவாமி பாசயோ என்பவரால் மந்தரிக்கப்பட்டது. 1957 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி இவ்வாலயத்திற்கு நூற்றாண்டு விழா எடுத்துச் சிறப்பித்தனர் நம் முன்னோர்கள்.

கூட்டப்புளி ஊரின் வரலாற்றுச் சின்னங்கள்:

சவேரியார் ஊருணி:
கூட்டப்புளியினுடைய வரலாற்றுச் சின்னங்களில் மிகவும் பழமைவாய்ந்ததும், பெருமைமிக்கதும் சவேரியார் ஊருணி தான். சவேரியாரின் திருப்பாதங்கள் பட்ட இடமல்லவா அது.

“ஒரு சிறிய நீரூற்றிலிருந்து கசிந்து வந்த தண்ணீர் வடிகாலின்றி தேங்கிக்கிடந்த இடம்தான் ஊருணி. மீன்பிடிக்கச் சென்றுவிட்டு திரும்புகின்ற கூட்டப்புளி மீனவர்கள், தங்கள் உடலைக் கழுவுவதற்காக இத்தண்ணீரைப் பயன்படுத்தினர்.”

புனித சவேரியார் முத்துக்குளித்துறைப் பகுதியில் மறைப்பணியாற்றிய காலக்கட்டத்தில் கூட்டப்புளி மக்களைச் சந்தித்த பின்னர், “ஊருணிக்கு வந்து தன்னுடைய பாதங்களைக் கழுவி ஊருணித் தண்ணீருக்கு அற்புத சுகமளிக்கும் சக்தியைத் தந்தார்.” என்று வரலாற்றுச் சுவடிகள் ஆதாரம் தருகின்றன. எனவே, சவேரியார் கூட்டப்புளியில் வேதம் போதித்த காலக்கட்டத்திற்கு (அக்டோபர் 1542-செப்டம்பர் 1543) முன்பே கூட்டப்புளியும் ஊருணியும் இருந்தது என்பது தெளிவாகிறது.

சவேரியாரின் புதுமை:
“கூட்டப்புளியில் கடல் நீர்த்துளிகளை எடுத்து ஒரு சங்கிலி செய்து, ஹரிகன் லாம்பில் பொருத்தி எடுத்துச் சென்றொரு புதுமை செய்தார் என்றொரு குறிப்பு காணப்படுகிறது.

புனித சவேரியார் ஊருணித் தண்ணீருக்கு அற்புத சுகமளிக்கும் சக்தியை தந்த நாள்தொட்டு, கூட்டப்புளி மக்கள் ஊருணியில் குளிக்க ஆரம்பித்தனர். ஊருணித் தண்ணீர் வெண்பச்சை நிறத்தில் தோன்றினாலும் அது சுத்தமாகவே இருந்தது.

சிலுவைக் கோயில்:
1907 ஆம் ஆண்டு வரையில் திருவாங்கூரைச் சேர்ந்த “ஆழ்வார்கள்” “உப்பளவர்கள்” என்னும் ஓர் இந்து மதப் பிரிவினர் கூட்டப்புளியில் இந்துக் கோயில் ஒன்றைக் கட்டி, ஆண்டுதோறும் கூட்டப்புளி மக்களிடம் வரி வசூலித்து விழாக் கொண்டாடி வந்தனர். கூட்டப்புளியின் பங்கு பரிபாலகராக இருந்த அருட்திரு. பீட்டர் பிராசாந்தும் (1843-51) அவருக்குப் பின் வந்தவர்களும் இந்த இந்துக்கோயில் நிர்வாகத்தை வன்மையாக எதிர்த்தும் எந்த பலனும் அளிக்கவில்லை. 1907 ஆம் ஆண்டு இக்கோயில் அழிந்து போயிற்று. கோயிலில் உபயோகித்த மரச்சிலைகளும், மரக்குதிரைகளும் சுவாமியார் வீட்டில் விற்காகப் பயன்பட்டன. அருட்பணி. கௌசானல் அடிகளார் இக்கோயில் இருந்த இடத்தில் சிலுவைநாதருக்கு கோயில் கட்டி அக்கோயில் 14-09-1912 அன்று திருச்சிலுவை உயர்த்தப்பட்ட நாளில் மந்தரிக்கப்பட்டது.
தவக்காலத்தில் நம் ஊரில் பாஸ்கு நடத்தப் பயன்படுத்தப்பட்ட சிலுவைதான் சிலுவைக்கோயிலில் நிறுத்தப்பட்டிருக்கிறது. புதிதாகத் திருமணமாகி ஊருக்குள் வருபவர்கள் சிலுவைநாதரை சந்தித்து ஆசி பெறும் பழக்கம் இன்னும் வழக்கில் உள்ளது.
சிலுவைக்கோயிலில் வருடந்தோறும் செப்டம்பர் 13ஆம் தேதி மாலை ஆராதனையும் (வெஸ்பிரஸ்) 14ஆம் தேதி காலை திருவிழாத் திருப்பலியும் நடைபெறுகிறது. மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமைகளிலும் இங்கு திருப்பலி நடைபெறுகிறது. தினம்தோறும் மாலை 3:00 மணிக்கு மக்கள் சிலுவைநாதரிடம் உருக்கமாக ஜெபம் செய்து அவரின் ஆசி பெற்றுச் செல்கின்றனர். வருடாவருடம் தவக்காலத்தில் குருத்து ஓலைத் திருவிழாப் பவனி சிலுவைக் கோயிலிலிருந்து தொடங்குகிறது.

கொடிமரம்:
புனித சூசையப்பர் ஆலயத்திற்கு முன் கம்பீரமாக நின்று கொண்டிருக்கின்ற 45 அடி உயரமுள்ள தாய்க்கொடிமரம் தொழிலதிபர் திரு.A.V. தாமஸ் கூட்டப்புளிக்கு கொடுத்த அன்பளிப்பு என்று சொல்வதைவிட புனித சூசையப்பர் கூட்டப்புளிக்குக் கொடுத்த கொடை என்றே சொல்ல வேண்டும்.
அருட்பணி. பாக்கியநாதர் பங்குத்தந்தையாக (1943-49) இருந்த காலம். பெரும்புயலில் சிக்கிய அயல்நாட்டுக் கப்பல் (S.S.Camila) ஒன்று தரைதட்டி, இடிந்தகரை அருகிலுள்ள கடற்கரைப் பகுதியில் ஞானப்பிரகாசியார் சிற்றாலயம் அருகில் (யானைக் கல்லுக்குப் பக்கம்), சேதமடைந்த நிலையில் நின்றது. தொழிலதிபர் திருமிகு.A.V. தாமஸ் அவர்கள் அதை ஏலத்தில் எடுத்திருந்தார். கப்பலை உடைத்தெடுக்கும் பணியில் கூட்டப்புளியைச் சார்ந்த, கப்பல் தொழிலில் அனுபவம் மிக்க திரு.மிக்கேல் (கம்பையாப்பிள்ளை), திரு. மடுத்தீன் ஓடாவியார், திரு. சூசை மிக்கேல் (வேலப்பிள்ளை), திரு. பாவுல் சந்தக்குருஸ் லியோன் (திரு. சங்கீதம் லியோன் தகப்பனார்) போன்றவர்கள் ஈடுபட்டிருந்தனர். கப்பலில் பெரியதும், சிறியதுமாக இரண்டு கொடிமரங்கள் கம்பீரமாக நின்றன. பெரிய கொடிமரத்தை கூட்டப்புளிக் கோயிலுக்குத் தரும்படி கேட்டனர். திருமிகு. A.V. தாமஸ் இசைவு தந்தார். கொடிமரம் கப்பலிலிருந்து அறுத்தெடுக்கப்பட்டது. கொடிமரத்தினுடைய எடையைக் கணக்கிட்ட திருமிகு. A.V. தாமஸ் சற்று மனம் மாறியவராய் “பின்னர் பார்க்கலாம்” என்றார். பெரும்புயல் அடித்தது. கொடிமரம் கடலில் விழுந்தது. இன்னும் அது கடலிலேயே கிடக்கிறது. மனம் மாறிய கணப்பொழுதில் நடந்த இந்த நிகழ்ச்சியால் விழித்துக் கொண்ட திருமிகு. A.V. தாமஸ் சின்னக் கொடிமரத்தைக் கொடுப்பதாக வாக்களித்தார். சின்னக் கொடிமரம் கப்பலிலிருந்து அறுத்து எடுக்கப்பட்டு, பல கட்டுமரங்களை ஒன்று சேர்த்துக் கட்டி அவைகளில் ஏற்றினர். கூட்டப்புளி மக்கள், ஆண்களும் பெண்களுமாக ஒரு பெருங்கூட்டமாக அங்கு நின்று கொண்டிருந்தார்கள். கொடிமரம் மேற்கு நோக்கி கூட்டப்புளிக்குச் செல்ல வேண்டும். ஆனால், காற்று கிழக்கு நோக்கி (சோழத் தென்றல்) வீசிக்கொண்டிருந்தது. கட்டுமரங்களை ஒரு இம்மியளவு கூட நகர்த்த முடியவில்லை. திகைத்து நின்ற மக்கள் கூட்டம், புனித சூசையப்பரை நோக்கி மன்றாட, காற்று திசைமாறி மேற்கு நோக்கி வீசியது (வாடைத் தென்றல்). இன்ப அதிர்ச்சி அடைந்த மக்களின் கண்கள் குளமாயின. புனித சூசையப்பருக்கு நன்றிப்பண் பாடியபடியே, தொளவை (துடுப்பு) கூட அவசியமில்லாமல், மிக எளிதாகவே கொடிமரத்தைக் கூட்டப்புளிக்குக் கொண்டுவந்து சேர்த்தனர். கப்பலில் கொடிமரம் எப்படி பொருத்தப்பட்டிருந்ததோ அதே போன்று வல்லுனர்களைக் கொண்டு நிறுத்தப்பட்டது. கொடிமரத்தின் உள்பாகம் கான்கிரீட்டினால் நிரப்பப்பட்டது. கொடிமரத்திற்கு பீடம் ஒன்று அமைத்தனர். எல்லா வேலைகளும் முடிந்து 31-08-1945 அன்று கொடிமரம் மந்திரிக்கப்பட்டது. நம் ஊரின் கொடிமரத்தினடியில் ஒரு கல்வெட்டு உள்ளது.
• Erected by Bharathar of Kuttapuli 31-08-1945
• Mast removed from S.S.Camila and Presented by Mr. A.V.Thomas

புதிய கொடிமரம் நிர்மாணிப்பதற்கு முன்னர் பயன்படுத்திய கொடிமரங்கள்தான் (பிள்ளைக் கொடிமரங்கள்) இன்று புதிய கொடிமரத்திற்கு மேல் சிலுவை வடிவில் கட்டப்படுகிறது. (தகவல்: திரு. M.A. செல்லப்பா & M. ஜார்ஜ்)

கோரி:

புனித சூசையப்பர் ஆலயத்திற்கு நேர் தெற்கில், கடற்கரைக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கும் கட்டிடம்தான் “கோரி” என்று அழைக்கப்படுகிறது. கோரி எந்த ஆண்டு கட்டப்பட்டது என்ற எந்தத் தகவலும் இல்லை. ஆனால், கோரி கட்டி 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் எனக்கருதுகிறேன். கோரிக்கு மேல் ஒரு கண்ணாடிக் கூண்டு இருந்தது. அக்கூண்டில் நாள்தோறும் இரவில் விளக்கு வைப்பது வழக்கம். கன்னியாகுமரியில் கலங்கரை விளக்கு (Light House) கட்டுவதற்கு முன், அப்பகுதி கடலோடிகளுக்கு இவ்விளக்குதான் கலங்கரை விளக்காக இருந்திருக்கிறது. 1970 ஆம் ஆண்டு வரை இந்த விளக்கு தினமும் ஏற்றப்பட்டு வந்திருக்கிறது. கோரியின் முன்புறம் ஒரு சுரூபம் வைக்கும் அளவுக்கு ஒரு இடம் இருந்தது. அந்த இடத்தில் அருட்பணி. V. இருதயராஜ் அவர்களால் 11-2-1971 ஆம் ஆண்டு பங்குக் கோயிலிலிருந்த லூர்து மாதா சுரூபம் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடக்கின்றன. வருடா வருடம் 10 நாட்கள் திருவிழா கொண்டாடுகிறார்கள். விபூதித்திருநாளுக்கு முன்வரும் 3வது ஞாயிற்றுக்கிழமை திருவிழா முடிவடையும். இத்திருவிழா பாடல் பூசையில்தான் வழக்கமாக புனித சூசையப்பர் திருவிழாவின் பாரம்பரியமிக்க அறிக்கை வாசிக்கப்படும். 26-12-2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பழுதுபட்ட கோரிக்கட்டிடம் ஏப்ரல் 2005ல் புதுப்பிக்கப்பட்டது. (தகவல்: திரு. I. தேவராஜ் பர்னாந்து- பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்)

வியாகுலமாதா குருசடி:

புனித சூசையப்பர் ஆலயத்திற்கு எதிரே, கொடிமரத்திற்கு பின்புறம் அமைந்திருக்கிறது வியாகுலமாதா குருசடி. ஆலயத்திற்கு எதிர்புறம் குருசடி அமைப்பது புனித சவேரியாருடைய பாணி. மேலும், வியாகுலமாதா குருசடிக்கு மேல் அமைந்துள்ள இரட்டைக் குருசு (சிலுவை) போர்ச்சுக்கல் நாட்டினருடைய சிலுவை அடையாளம். ஆகவே, வியாகுலமாதா குருசடியை போர்ச்சுக்கல் நாட்டு இயேசு சபைக் குருக்கள் கட்டியிருக்கலாம் எனக்கருதுகிறேன். எப்பொழுது கட்டப்பட்டது என்பதற்கு கல்வெட்டோ அல்லது எழுத்து பூர்வமான ஆதாரங்களோ இல்லை. வியாகுலமாதா சபைச் சகோதரி யேசுமரி சூசை தாயார் இங்கே அடக்கம் பண்ணப்பட்டிருப்பதாகக் கூட வாய்வழிச் செய்தி உண்டு. வியாகுலமாதா சபையினர் (கொம்பிரியர் சபை) இக்குருசடியைப் பராமரித்து வருகின்றனர். தாய்ப்பால் சுரக்காத தாய்மார், இக்குருசடியில், தாய்ப்பால் சுரக்க, வேண்டுதல் செய்யும் போது அவர்களுக்கு தாய்ப்பால் சுரக்கிறது என்கிறார்கள். பசு கன்று ஈணும் போதும், ஆடு குட்டி போடும் போதும், முதல் பால் கரந்து இக்குருசடியில் வளித்து வேண்டுகிறார்கள். (திரு. அமல்ராஜ் கோஸ்தா).

பரிசுத்த பாத்திமா அன்னை கெபி:

இக்கெபி திரு. மரிய அலங்காரம்(தங்கையா பர்னாந்து) மற்றும் திரு. மோட்ச அலங்காரம் பர்னாந்து குடும்பத்தினரால் 1952 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பொன்விழாவை முன்னிட்டு 2002 ஆம் ஆண்டு பங்கு மக்களின் நன்கொடைகளின் உதவியால் கெபி புதுப்பிக்கப்பட்டு, அப்போதைய தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு. பீட்டர் பர்னாண்டோ ஆண்டகை அவர்களால் மந்திரிக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும், முதல் சனிக்கிழமை காலையில், திருப்பலி நடைபெறுகிறது. ஒவ்வொரு வருடமும் மே மாதம் 4 ஆம் தேதியிலிருந்து 13 ஆம் தேதிவரை 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. தினந்தோறும் மாலையில் மக்கள் ஜெபிக்கின்றனர். பக்தர்கள் கேட்ட வரம் கிடைக்கிறது.

பங்குத்தந்தை இல்லம் :
சுவாமியார் பங்களா என்று நாம் சொல்லும் பங்குத்தந்தை இல்லம். கடற்கரைக் கிராமங்களில் இப்படியொரு பிரம்மாண்டமான பங்குத்தந்தை இல்லம் கூட்டப்புளியைத் தவிர வேறெங்கும் இல்லை. அருட்பணி. லூயிஸ் காட்ரி அவர்களால் 1905 ஆம் ஆண்டு, ரூபாய்.1,800 செலவில் கட்டப்பட்டிருக்கிறது.

கூட்டப்புளி ஊர் சொத்துக்கள்:

முத்துக்குளித்துறை கடற்கரைக் கிராமங்களிலேயே அதிகமான நிலபுலச் சொத்துக்கள் உள்ள ஊர் கூட்டப்புளிதான். இவைகள் பெரும்பாலும் தென்னந்தோப்புகளே!. அருட்தந்தை. பிரிசாந்த் (1843-51) என்பவர் இச்சொத்துக்களை வாங்கியுள்ளார். சொத்துக்களின் விவரம் பின்வருமாறு.

  1. ஊர்த்தோப்பு - 40 தென்னை மரங்கள், 100 பிற மரங்கள். இங்கே ஒரு கிணறும் இருந்தது (சூசையப்பர் கிணறு). தோப்பு மிக்கேலைய்யா குருசடிக்கு வடபகுதியில் இருந்தது.
  2. கல்லறைத்தோப்பு - ஒரு ஏக்கர் நிலம் - 40 தென்னை மரங்கள்.
  3. கீழத்தோப்பு - ஊருக்குக் கிழக்கே, அந்தோனியார் குருசடிக்கு தென்கிழக்குப் பகுதி. 4.5 ஏக்கர் - 300 தென்னை மரங்கள்.
  4. மேலத்தோப்பு - 3 ஏக்கர் - 200 தென்னை மரங்கள் - 108 பனை மரங்கள்.
  5. சாமியார் தோப்பு - 1.5 ஏக்கர் - 100 தென்னை மரங்கள். இன்றைய புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியின் கிழக்குப் பகுதிகளில் காணப்பட்டன. இந்தத் தோப்புகள் எல்லாம் பராமரிப்பின்றி சமீபத்தில் (1970-களில்) அழிந்துவிட்டன.

இந்த சொத்துகள் போக, பாமணிச் சொத்து (நஞ்சை/புஞ்சை நிலம்) 1928 ஆம் ஆண்டு அருட்பணி. J.S. லூர்துசாமி அவர்களால் வாங்கப்பட்டது. நஞ்சை, புஞ்சை, குளம் என்று பல ஏக்கர்களில் (எத்தனை ஏக்கர் என தெரிந்தவர்கள் விவரம் சொல்லவும்) பரந்துகிடக்கின்ற இந்தப் பொன்விழையும் பூமி, ஆலயத்திற்கு நல்ல வருமானத்தை இன்றும் ஈட்டித் தந்து கொண்டிருக்கிறது.


கூட்டப்புளி மக்களின் தனிச்சிறப்புக்கள் (டச்சுக்காரர்கள் கொடுத்த சிறப்புச் சலுகைகள்) :

போர்ச்சுக்கீசியர் வளமிகு பாரத நாட்டுடன் வணிக உறவு கொண்டு பெரும்பொருள் ஈட்டியதைத் தொடர்ந்து, டச்சு நாட்டினரும் இந்தியாவுடன் வணிகத் தொடர்பு கொண்டனர். வணிகம் புரிய வந்த டச்சு நாட்டினர் நாடாளும் பேராசை கொண்டனர். இந்தியாவில் போர்ச்சுக்கீசியரின் ஆதிக்கத்தை ஒடுக்கினாலொழிய அது சாத்தியமாகாது என்று கருதிய டச்சு நாட்டினர், போர்ச்சுக்கீசியருடன் போரிட்டு இந்தியாவின் முத்துக்குளித்துறையின் முக்கிய பகுதிகளைத் தங்கள் ஆளுமைக்குள் கொண்டு வந்தனர். முத்துக்குளித்துறையின் கடலோரக் கிராம மக்களிடமெல்லாம் வரித் தண்டினர். ஆனால், கூட்டப்புளி கிராம மக்களுக்கு மட்டும் வரிவிதிப்பிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டது. ஏன் இந்த விதிவிலக்கு? “கூட்டப்புளி கடல்பகுதிகளில் நீண்டு கிடக்கின்ற பாறைகளில், புயல்காற்றினால் தூக்கி வீசப்படுகின்ற டச்சுக்கப்பல்களை, கூட்டப்புளி மீனவர்களால்தான் பாதுகாத்துக் கொடுக்கமுடியும்.” நம் முன்னோர்கள் தொன்றுதொட்டுப் பலமும் விவேகமும் உள்ளவர்கள்.

கூட்டப்புளியின் தனித்தன்மை:

தூத்துக்குடி ஜாதித்தலைவரையும், கூத்தன்குளித் தலைவரையும் (கித்தேரியான் பட்டங்கட்டியாராக இருக்கலாம்) உவரி, கூத்தன்குளி, இடிந்தகரை, பஞ்சல், பெருமணல் போன்ற ஊர்கள், தலைவர்களாக ஏற்றுக்கொண்டன. ஆனால், கூட்டப்புளி மட்டும் அவர்களைத் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளவே இல்லை. கூட்டப்புளியினுடைய ஒரே தலைவர் கத்தோலிக்கக் குரு மட்டுமே.

மற்ற ஊர்களிலெல்லாம் கோயில் ஊருக்குச் சொந்தம். ஆனால், கூட்டப்புளி மட்டும் சற்று வேறுபட்டிருந்தது. “ஊர் கோயிலுக்குச் சொந்தம்”. சற்று வினோதமாக இருந்தாலும் இதுதான் உண்மை. இதன் அடிப்படையில் கோயில் நிர்வாகம் கீழ்க்கண்டவாறு வரி வசூலித்தது.

அ). திருமணத்தின் போது வீட்டுமுன் பந்தல் அமைக்கவும், தெரு வீதிகளில் குதிரைமேல் சவாரி செய்யவும் ( காவணம், கதிராட்டம்) ரூ.2.25 (ரூ.2.4 அணா). ஊர் பெரியவர்கள்தான் மணமக்கள் வீட்டில் பந்தல் போடுவதற்கு ஆலயத்தின் பெயரால் முதல் மூங்கில் கொம்பு நட்டவேண்டும்.

ஆ). ஊர் வெற்றிலை வைக்க 10 அணா (65 பைசா)

இ). “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு” என்பதை நிரூபித்துக்காட்டியவர்கள் நம் ஊர் மக்கள். மலைபோல வந்த துன்பத்தைக் கூட ஒற்றுமையால் மடுபோலாக்கி வெற்றிவாகை சூடியவர்கள். பொருளாதாரச் சிக்கல்களைக் கூட மிகச் சாதுர்யமாகச் சமாளித்த பொருளாதார மேதைகள் நம் முன்னோர். சேசு சபைக் குருக்கள் புகுத்திய “தெரிப்பு” “மகமை” “துவிக்குத்தகை” போன்றவற்றைக் கையாண்டு பொருள் வளம் சேர்த்து தனி வேன் வாங்கி நிலைமைகளைச் சமாளித்தவர்கள்.

கூட்டப்புளியில் சுனாமி:

எத்தனை ஆழிப்பேரலைகள் வந்தாலும் அவை சூசையப்பருடைய பார்வைக்கு அடங்கி தன்னுடைய வேகத்தைக் குறைத்துக் கொள்கின்றன. சுனாமிக்குக் கூட நாம் 150-ஆம் ஆண்டு நினைவு விழா எடுக்க வேண்டும். 1857- ஆம் ஆண்டில் கூட சுனாமி, நமது ஊரைத் தாக்க முயற்சி பண்ணியிருக்கிறது. பல மணி நேரம் நம் ஊர் கடற்கரைப் பகுதிகள் கடல் நீரால் சூழப்பட்டிருந்தது. ஊரையே மூழ்கடிக்கும் அபாயம் இருந்திருக்கிறது. 1857-ஆம் ஆண்டு நம் ஊரில் ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகுதான், நம் ஊர்மக்கள் கோயிலுக்கு வடபகுதிகளிலிருந்த காடுகளையும், பாம்புப் புற்றுகளையும் அழித்துவிட்டு வீடுகள் அமைத்திருக்கின்றனர். அந்தக் காடுகளில் புலிகள் கூட இருந்திருக்கின்றன. அப்படியானால், நம் ஊரின் பெயர் அக்காலத்தில் “கூட்டப்புலி” யா?!

26.12.2004-ல் வீறுகொண்டு எழுந்து மக்களை விரட்டிச் சென்ற, அரக்க அலைகளின் கோரத்தாண்டவத்தை நாம் பார்த்தோமே! அலைகள் ஆவேசமாக ஊருக்குள் பாய்ந்து வருவதைக் கண்ட மக்கள், உயிரைப் பாதுகாக்க வேண்டி, குழந்தைகளையும், வயது முதிர்ந்தோரையும் தோளில் சுமந்து கொண்டும், தூக்கிக் கொண்டும் ஊரையே காலி செய்து விட்டு, அருகாமையிலுள்ள பாதுகாப்பான கிராமங்களில் தஞ்சம் புகுந்தனர். பக்கத்து ஊர் மக்கள் கொடுத்த ஆதரவையும், அரவணைப்பையும் நினைக்கும் போது, “மனிதம் இன்றும் வாழ்கிறது. இறைவன் மனிதனில் வாழ்கிறார்.” என்பதை மறுப்பதற்கில்லை.

இப்படியொரு நீண்ட, நேர்த்தியான, பலரும் பாராட்டக்கூடிய வரலாற்றைத் தன்னடக்கிய கூட்டப்புளி ஊரின் “மண்ணின் மைந்தர்கள்” என்று சொல்வதில் நாம் புழங்காகிதம் அடைய வேண்டும்.

இந்த வரலாற்றை எழுதுவதற்குக் காரணங்கள் பல. நம் ஊர் இளைஞர்களுக்கு நமது வரலாறு தெரிய வேண்டும். வரலாறு தெரிந்தால்தான் நம் ஊர் மீது பற்றும் பாசமும் அதிகமாகும்.

வரலாற்றுச் சின்னங்கள் பராமரித்துப் பாதுகாக்கப்பட வேண்டும்; நம் ஊரினுடைய சிறப்புத் தன்மைகள் கட்டிக்காக்கப்பட வேண்டும். நம் ஊர் மக்கள் ஒரே மனநிலை உடையவர்களாக ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.

நன்றி: புனித சூசையப்பர் ஆலயம் , கூட்டப்புளி - 150 வது (1857 - 2007) ஆண்டு விழா மலர்