எங்களைப் பற்றி ...
கல்விதான் அழியாச் செல்வம்; கல்வி தான் ஒரு மனிதனை வாழ்விக்கிறது என்பதை உணர்ந்த அன்றைய கூட்டப்புளி பங்குத்தந்தை அருட்பணி. A. பங்கிராஸ் பர்னாந்து அடிகளாரும், கூட்டப்புளி ஊர் பெரியவர்களும் 1969- ல் கூட்டப்புளியில் உயர்நிலைப்பள்ளி தொடங்க பெரிதும் முயற்சி எடுத்து 1970ல் வெற்றியும் கண்டனர்.
இந்நேரத்தில், உயர்நிலைப்பள்ளி தொடங்க, மீதம் தேவைப்பட்ட பணத்திற்கு தங்களது தங்க நகைகளை கழட்டிக் கொடுத்த எம் கூட்டப்புளி ஊர் பெண்கள்தம் பாதம் பணிகிறோம்.
உயர்நிலைப்பள்ளிக்கு அனுமதி பெறுவதில், கூட்டப்புளி ஊர் மக்களின் செபமும் உழைப்பும் ஒன்று சேர்ந்ததால், பள்ளிக்கு Motto “Pray and Work” “இறையருளோடு உழை” என்ற விருதுவாக்கை அன்றைய கூட்டப்புளி ஊர் பங்குத்தந்தை அருட்பணி. A. பங்கிராஸ் பர்னாந்து அடிகளார் கொடுத்தார்கள்.
அருட்திரு. சார்லஸ் பர்னாந்து அடிகளாரின் காலத்தில், எம் பள்ளி 1979-ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. எம் பள்ளி மாணவ மாணவியருக்கு பிற்பட்டோர் நலத்துறை மூலம் தனித்தனி அரசு விடுதிகள் ஆரம்பிக்கப்பட்டன.
அரசுத்தேர்வு எழுதும் 10-ஆம், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எம் பள்ளியில் தேர்வு மையம் ஏற்பாடானது.
அருட்பணி. சிலுவை இஞ்ஞாசி அடிகளாரை எம் பள்ளி என்றுமே நினைவில் நிறுத்திக் கொள்ளும். பள்ளியில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்த இவர், ஒரு பிரம்மாண்டமான பள்ளிக்கூட கட்டிடத்தை எமக்கு அவர்களுடைய சொந்தச் செலவிலேயே கட்டிக் கொடுத்து எம்மூர் மக்களின் மனங்களில் நீங்காதொரு இடம் பிடித்திருக்கிறார்.
எங்கள் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் உயர்திரு. P.காண்டீபன் அவர்கள் தமிழக அரசின் டாக்டர். இராதாகிருஷ்ணன் விருதாகிய நல்லாசிரியர் விருது பெற்று எம் பள்ளிக்கு பெருமை சேர்த்தவர்.