புனித ஜார்ஜியார் சிற்றாலயம்
இப்போது ஜார்ஜியார் சிற்றாலயம் அமைந்திருக்கும் இடமானது, முன்பு பனங்காடாக இருந்தது. அந்த இடத்தில், மாண்புமிகு. லூர்தம்மாள் சைமன் அவர்கள் அமைச்சராக இருந்த காலத்தில், மாநில அரசு கட்டிக்கொடுத்த வீடுகள் வந்தன. இந்த இடத்தின் மிக அருகில் மக்கள் வழிபட எந்த குருசடியும், கெபியும் அமைந்திருக்கவில்லை. அதேவேளையில், இந்த தெரு மக்கள், பேய் பிசாசுகள் இந்தப் பகுதிகளில் நடமாடுவதை உணர்ந்து இருந்தனர்.
எனவே, தெரு மக்கள் அனைவரும் இணைந்து ஒரு குருசடி கட்டி வழிபட முடிவெடுத்தனர். பின்னர், தங்களுக்குள், எந்தப் புனிதரை குருசடியில் வைத்து வழிபடலாம் என்பது பற்றி கலந்தாலோசித்து, எடத்துவா புனித ஜார்ஜியார் நினைவாக, புனித ஜார்ஜியார் சுரூபத்தை வைத்து வழிபடலாம் என முடிவெடுத்தனர்.
பின்பு, புனித ஜார்ஜியார் குருசடிகள் அமைந்திருந்த புத்தன்துறை, இராமன்புதூர் போன்ற ஊர்களுக்கு சென்று பார்த்துவிட்டு, இறுதியாக இராமன்புதூர் புனித ஜார்ஜியார் குருசடியை மாதிரியாக வைத்து, இராமன்புதூர் கொத்தனாரைக் கொண்டு குருசடி கட்ட தீர்மானிக்கப்பட்டது.
1982-ஆம் ஆண்டு, ஊர் கணக்கப்பிள்ளை, லூர்துப்பிள்ளை, விசுவாசம் பர்னாந்து போன்ற ஊர்ப்பெரியவர்களின் தலைமையில், தெரு மக்களால் குருசடிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 1984-ஆம் ஆண்டு மே மாதம் புனித ஜார்ஜியார் குருசடி சீரும் சிறப்புமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்தக் குருசடி கட்ட மேற்குத்தெரு மக்கள் தங்கள் வருமானத்தில், மூன்றில் ஒரு பங்கு தந்தனர். அவர்களோடு ஊர் மக்களும் இணைந்து பண உதவி செய்தனர்.
பின்னர், புனித ஜார்ஜியார் குருசடியை விரிவாக்கம் செய்ய தீர்மானித்து, 2012-ஆம் ஆண்டு வேலை தொடங்கப்பட்டு, புனித ஜார்ஜியார் சிற்றாலயமாக 2013-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், கட்டி முடித்து திறப்புவிழா கொண்டாடப்பட்டது.
இங்கு, அனைத்து நாட்களிலும் இரவு 7:00 மணிக்கு ஜெபம் நடைபெறும். மாதத்தின் கடைசி வெள்ளி அன்று மாலை 6:30 மணிக்கு திருப்பலி நடைபெறும்.
புனித ஜார்ஜியார் சிற்றாலயத்தில், உயிர்ப்பு பெருவிழாவிற்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை திருவிழா கொடியேற்றம் நடைபெற்று, தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
திருவிழாவின் போது, ஊர் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
- திருச்சிலுவை சிற்றாலயம்
- பரிசுத்த பாத்திமா அன்னை கெபி
- புனித லூர்து மாதா கெபி (கோரி)
- உத்தரிய மாதா சிற்றாலயம் (கல்லறை கோவில்)
- புனித ஜார்ஜியார் சிற்றாலயம்
- புனித சவேரியார் குருசடி (ஊருணி)
- தூய வேளாங்கண்ணி மாதா சிற்றாலயம்
- புனித சிந்தாத்திரை மாதா குருசடி
- புனித வியாகுல மாதா குருசடி
- புனித மிக்கேல் அதிதூதர் கெபி
- புனித அந்தோனியார் குருசடி (மேற்கு)
- புனித அந்தோனியார் குருசடி (கிழக்கு)
- புனித அந்தோனியார் சிற்றாலயம் (சுனாமி நகர்)
- தேர்மாலை