புனித சவேரியார் குருசடி (ஊருணி)
கூட்டப்புளியினுடைய வரலாற்றுச் சின்னங்களில் மிகவும் பழமைவாய்ந்ததும், பெருமைமிக்கதும் சவேரியார் ஊருணி தான். சவேரியாரின் திருப்பாதங்கள் பட்ட இடமல்லவா அது. “ஒரு சிறிய நீரூற்றிலிருந்து கசிந்து வந்த தண்ணீர் வடிகாலின்றி தேங்கிக்கிடந்த இடம்தான் ஊருணி. மீன்பிடிக்கச் சென்றுவிட்டு திரும்புகின்ற கூட்டப்புளி மீனவர்கள், தங்கள் உடலைக் கழுவுவதற்காக இத்தண்ணீரைப் பயன்படுத்தினர்.” புனித சவேரியார் முத்துக்குளித்துறைப் பகுதியில் மறைப்பணியாற்றிய காலக்கட்டத்தில் கூட்டப்புளி மக்களைச் சந்தித்த பின்னர், “ஊருணிக்கு வந்து தன்னுடைய பாதங்களைக் கழுவி ஊருணித் தண்ணீருக்கு அற்புத சுகமளிக்கும் சக்தியைத் தந்தார்.” என்று வரலாற்றுச் சுவடிகள் ஆதாரம் தருகின்றன. எனவே, சவேரியார் கூட்டப்புளியில் வேதம் போதித்த காலக்கட்டத்திற்கு (அக்டோபர் 1542-செப்டம்பர் 1543) முன்பே கூட்டப்புளியும் ஊருணியும் இருந்தது என்பது தெளிவாகிறது.
சவேரியாரின் புதுமை:
“கூட்டப்புளியில் கடல் நீர்த்துளிகளை எடுத்து ஒரு சங்கிலி செய்து, ஹரிகன் லாம்பில் பொருத்தி எடுத்துச் சென்றொரு புதுமை செய்தார் என்றொரு குறிப்பு காணப்படுகிறது. புனித சவேரியார் ஊருணித் தண்ணீருக்கு அற்புத சுகமளிக்கும் சக்தியை தந்த நாள்தொட்டு, கூட்டப்புளி மக்கள் ஊருணியில் குளிக்க ஆரம்பித்தனர். ஊருணித் தண்ணீர் வெண்பச்சை நிறத்தில் தோன்றினாலும் அது சுத்தமாகவே இருந்தது.